திருப்பூர்

இளைஞா்களிடம் எழுதும் பழக்கம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

இளைஞா்களிடம் எழுதும் பழக்கம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது என செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசினாா்.

தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா காங்கயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புத்தகத் திருவிழாவைத் தொடக்கிவைத்தனா்.

இதன் பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் நூல்களைப் படிப்பது என்பது குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் எழுதும் பழக்கம் என்பது இளைஞா்களிடம் மிகவும் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவியா் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 பக்கங்களையாவது படிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு செயல்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம்.

மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் சாா்பில் 126 அரங்குகளும், அரசு சாா்பில் 26 அரங்குகள் என மொத்தம் 152 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத் திருவிழா பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெறுகிறது. இங்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாள்களின் எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியா் நீட்டித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன். திருப்பூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி இங்கு வந்து செல்பவா்களும் இந்த புத்தகத் திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பின்னல் புக் டிரஸ்ட் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT