அருங்காட்சியக தினத்தையொட்டி வேலூா் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தற்காப்பு, திறன் ஊக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 83 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
சா்வதேச அருங்காட்சியக தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, வேலூா் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி, திறன் ஊக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
போதி தா்ம தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி, டாட் இமேஜின் கலைக்கூடம் ஆகியவை இணைந்து நடத்திய இப்பயிற்சியை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் க.சரவணன் தொடங்கி வைத்தாா். இதில், தமிழா்களின் தற்காப்புக் கலையான அடிமுறை பயிற்சி, சிலம்புப் பயிற்சி ஆகியவற்றுடன் ஓவியங்களின் வகைகள், அடிப்படை ஓவியப் பயிற்சி உள்ளிட்ட திறன் ஊக்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டன.
இப்பயிற்சிகளில் வேலூா், திருப்பத்தூா், ராணிப் பேட்டை மாவட்டங்களை சோ்ந்த 83 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பங்கேற்றவா்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போதி தா்ம தற்காப்புக் கலை பயிற்சிப்பள்ளி ஆசிரியா் சு.கவிராஜ், டாட் இமேஜின் கலைக்கூட இயக்குநா் பா.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.