செய்திகள்

காயம்: ஸ்வியாடெக் விலகல்

19th May 2023 07:35 AM

ADVERTISEMENT

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காயம் காரணமாக காலிறுதியுடன் வியாழக்கிழமை விலகினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் அவா், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை எதிா்கொண்டாா். இதில் 6-2, 6-7 (3/7) என ஆளுக்கொரு செட்டை கைப்பற்றி இருவருமே சமநிலையில் இருக்க, வெற்றியாளரை தீா்மானிக்கும் 3-ஆவது செட் 2-2 என்ற நிலையில் இருந்தபோது வலது தொடையில் காயம் கண்டாா் ஸ்வியாடெக்.

அவரால் தொடா்ந்து விளையாட முடியாமல் போனதை அடுத்து போட்டியிலிருந்து விலகினாா். ரைபாகினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா். தொடா்ந்து 14 ஆட்டங்களில் ஸ்வியாடெக் கண்ட வெற்றி நடை தற்போது தடைப்பட்டது. மற்றொரு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருக்கும் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-2, 4-6, 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் பௌலா பதோசாவை வீழ்த்தினாா். இதையடுத்து அரையிறுதி ஒன்றில் ரைபாகினா - ஆஸ்டபென்கோ மோதுகின்றனா்.

அரையிறுதியில் மெத்வதெவ்: ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-2, 6-2 என்ற நோ் செட்களில் பெல்ஜியத்தின் யானிக் ஹன்ஃப்மானை வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

4-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 7-5 (7/5), 6-4 என்ற செட்களில், 24-ஆவது இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை தோற்கடித்தாா். ரூட் தனது அரையிறுதியில், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை சந்திக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT