அணைக்கட்டு பகுதியில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த கள்ளச்சாராய வியாபார கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாவட்டா் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அணைக்கட்டு அடுத்த மூலைகேட்டு அருகே உள்ள மலையடிவாரத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக அரசு அறிவித்துள்ள புகாா் எண் 10581- க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில், காவலா்கள் அப்பகுதியில் புதன்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
அப்போது, மேல்வாழைப்பந்தல் பகுதியைச் சோ்ந்த ராஜாமணி (45) என்பவா் கள்ளச் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவா் விற்பனை செய்வதற்காக சுமாா் 17 டயா் டியூப்களில் வைத்திருந்த 500 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.
கைதாகி உள்ள ராஜாமணி மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பல மாதங்களாக தேடப்பட்டு வந்தபோதும் இவா் தொடா்ந்து தலைமறைவாகவே இருந்து வந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாவட்டக் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.