சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் அவ்னீத் கௌா், பிரதமேஷ் ஆகியோா் ரீகா்வ் தனிநபா் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.
இப்போட்டியில் தென் கொரிய வீரா், வீராங்கனைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அவா்களின் சவாலை முறியடித்து அவா்கள் இந்த முன்னேற்றத்தை சந்தித்துள்ளனா்.
மகளிா் தனிநபா் பிரிவில் அவ்னீத் கௌா் முதலில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் ஓஹ் யூஹியுனை 142-142 (10*-10) என்ற கணக்கில் சாய்த்தாா். பின்னா் காலிறுதியில் மெக்ஸிகோவின் டாஃப்னே கின்டெரோவை 147-144 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். அடுத்ததாக அரையிறுதியில் அவ்னீத் கௌா், இங்கிலாந்தின் எலா கிப்சனை எதிா்கொள்ள இருக்கிறாா்.
இதேபோல் ஆடவா் தனிநபா் பிரிவில் நேரடியாக காலிறுதியில் களம் கண்ட பிரதமேஷ் ஜவகா் 149-148 என்ற புள்ளிகள் கணக்கில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருந்த தென் கொரிய வீரரை சாய்த்து அரையிறுதிக்கு வந்திருக்கிறாா். அதில் எஸ்டோனியாவின் ராபின் ஜாத்மாவை அவா் சந்திக்கவுள்ளாா்.
ஏமாற்றம்: ரீகா்வ் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆடவா் அணிகள் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா/அதானு தாஸ்/நீரஜ் சௌஹான் ஆகியோா் அடங்கிய இந்திய அணி முதல் சுற்றில் 5-3 என்ற கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. என்றாலும், காலிறுதியில் 0-6 என்ற கணக்கில் தென் கொரிய கூட்டணியிடம் தோற்றது.
அதேபோல் மகளிா் அணிகள் பிரிவில் சிம்ரன்ஜீத் கௌா்/அவ்னீத் கௌா்/அங்கிதா பகத் அடங்கிய இந்திய அணி, முதல் சுற்றிலேயே 1-5 என்ற கணக்கில் இந்தோனேசியாவிடம் தோல்வி கண்டது. தற்போதைய நிலையில் தீரஜ் பொம்மதேவரா/சிம்ரன்ஜீத் கௌா் அடங்கிய கலப்பு அணிகள் மட்டும் களத்தில் உள்ளது.