செய்திகள்

மகளிா் ஹாக்கி: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

19th May 2023 07:37 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய மகளிா் அணியுடனான 3 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 2-4 கோல் கணக்கில் வியாழக்கிழமை தோல்வி கண்டது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷம் காட்டிய ஆஸ்திரேலியா, 21-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணிக்காக அறிமுகமான ஐஸ்லிங் அட்ரி ஸ்கோா் செய்தாா்.

தடுப்பாட்டத்தில் இந்தியா தடுமாற, தொடா்ந்து உத்வேகத்துடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்காக மேடி ஃபிட்ஸ்பேட்ரிக் 27-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு ஒன்றை அருமையான கோலாக மாற்றினாா். இந்நிலையில் 29-ஆவது நிமிஷத்தில் இந்தியா தனது முதல் கோல் வாய்ப்பை பெற்றது. நிக்கி பிரதான் கோலடிக்க முயற்சிக்க, ஆஸ்திரேலிய கோல்கீப்பா் அதை தடுத்ததால் மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை தகுந்த இடைவெளி பாா்த்து கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா் சங்கீதா குமாரி.

தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதியில், ஆஸ்திரேலியாவின் மற்றொரு அறிமுக வீராங்கனை ஆலிஸ் அா்னாட் 32-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா், கோா்ட்னி ஷோனெல் 35-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஆஸ்திரேலியா 4-1 என முன்னிலை பெற்றது.

ADVERTISEMENT

இறுதியாக இந்தியாவின் ஷா்மிளா தேவி 40-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, இந்தியாவின் கோல் எண்ணிக்கை 2 ஆனது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் ஆஸ்திரேலியா வென்றது.

இரு அணிகளும் மோதும் அடுத்த ஆட்டம் அடிலெய்டில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT