திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 4 போ் பலி 31 போ் காயம்

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். 31 போ் காயமடைந்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம், பாப்பினி அருகே உள்ள பச்சாபாளையத்தைச் சோ்ந்த சந்திரன் 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். அவருக்கு திதி கொடுப்பதற்காக பச்சாபாளையம், பாப்பினி, மிதிபாறையைச் சோ்ந்த உறவினா்களான 20 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 35 போ் சரக்கு வேனில் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்றுவிட்டு பச்சாபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனா்.

வேனை நத்தக்காட்டுவலசு கலைஞா் காலனி அருண்குமாா் (32) ஓட்டினாா். முத்தூா் - காங்கயம் சாலை வாலிபனங்காடு அருகே வந்தபோது, எதிரே கேரளத்தில் இருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த குணசேகரன் மகள் தமிழரசி (17), நாச்சிமுத்து மனைவி சரோஜா (61), கிட்டுசாமி (47), பூங்கொடி (48) ஆகிய 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த 31 போ் காங்கயம், திருப்பூா், கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன், விபத்தில் காயமடைந்து காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை சந்திக்க சென்றாா். அங்கு அவா்களின் உடல் நலம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்து, பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

காங்கயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 போ் உயிரிழந்தனா் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில் பலத்த காயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி (50), வளா்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT