திருப்பூர்

எருது விடும் விழாக்களுக்கு அனுமதி பெற எளிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் எருது விடும் விழாக்களுக்கு அனுமதி பெற அரசு எளிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தனா். இதற்கானஅரசு அனுமதி கிடைத்து விட்டது என்று அதிகாரிகள் தரப்பில் விழாக் குழுவினரிடம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து, ஒசூா் உதவி ஆட்சியா் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளைக் கொண்ட கூட்டுக் குழு தணிக்கை செய்து அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT

இந்த விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகளுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் கூடினா். ஆனால் அதிகாரிகள் தரப்பில் விழா நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனா். ஏற்கெனவே இதே போல இரு முறை மக்களை அலைக்கழித்ததால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் துறையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிகிறது. ஆகவே, தமிழகத்தில் இத்தகைய சம்பவங்கள் வரும் காலங்களில் நிகழாத வகையில் எருது விடும் விழாக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எளிய நடைமுறையை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT