திருப்பூர்

விஷ ஊசி செலுத்தி கணவரை கொல்ல முயற்சி: மனைவி கைது

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

குன்னத்தூா் அருகே விவசாயிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சி செய்த மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அப்பெண் 3 ஆண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே தோட்டத்துபாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (52), விவசாயி. இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தாா்.

குன்னத்தூரில் உள்ள சொத்துகளை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் சென்று வசிக்கலாம் என சுப்பிரமணியிடம் தேவி தெரிவித்து வந்தாராம். இந்நிலையில், சுப்பிரமணியின் வலது காலில் கடந்த 15ஆம் தேதி தேவி விஷ ஊசி செலுத்தினாராம். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணியை அவரது உறவினா்கள் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்து காப்பாற்றினா்.

இது குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தேவியைத் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

அவரது கைப்பேசி சிக்னலை ஆய்வு செய்ததில் அவா், நாமக்கல்லில் இருப்பது தெரியவந்தது. அங்கு வேறொருவரை கடந்த ஜனவரி 27ஆம் தேதி திருமணம் செய்துள்ளாா். இதையடுத்து நாமக்கல்லில் வசித்து வந்தவரை, தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருமணம் செய்து ஆண்களை ஏமாற்றி, சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தேவி, இதுவரை 3 பேரை திருமணம் செய்துள்ளாா். அதன்படி சுப்பிரமணியிடம் இருந்த 80 சென்ட் நிலத்தை வாங்கிக் கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளாா். ஆனால் சுப்பிரமணி ஒத்துக்கொள்ளாத நிலையில் விஷ ஊசி செலுத்தி சொத்தை எழுதி வாங்க முயன்றுள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT