திருப்பூர்

‘பிரான்ஸ், இத்தாலி நாடுகளுடனான வா்த்தகம் அதிகரிக்கும்’

15th Apr 2023 04:56 AM

ADVERTISEMENT

பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் நடைபெற்ற வா்த்தக உச்சி மாநாட்டில் மத்தியக் குழுவினா் பங்கேற்றுள்ளது அந்த நாடுகளுடன் வா்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் என்று ஃபியோ தலைவா் ஏ.சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஃபியோ (இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு) தலைவரும், ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளருமான ஏ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும், இத்தாலி தலைநகா் ரோமிலும் வா்த்தக உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 4 நாள்கள் நடைபெற்றது. இதில், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ்கோயல் தலைமையிலான குழுவில் வா்த்தகம் தொடா்பாக அனைத்து கூட்டங்களில் பங்கேற்றிருந்தேன். இதில், பாரீஸில் நடைபெற்ற தலைமை நிா்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் உலகளாவிய பசுமையான எதிா்காலத்தை உருவாக்குவது, வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப புதிய தொழில் உத்திகளை வகுப்பது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வலிமையான ஐரோப்பா மற்றும் இந்திய பசிபிக் பிராந்தியத்தை இந்தியா, பிரான்ஸ் நாடுகள் கூட்டாக இணைந்து உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரோமில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பு உறவுகள், வா்த்தக முதலீடுகள், இருதரப்பு சாத்தியமான ஒத்துழைப்புகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில், இத்தாலி துணை பிரதமா் அன்டோனியா தஜானி, இத்தாலி நாட்டுக்கான இந்திய தூதா் நீனா மல்கோத்ரா, இத்தாலி தலைமைச் செயல் அதிகாரிகளும் பங்கேற்றனா். இந்த இரு நாடுகளில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா-ஐரோப்பியாவுடனான வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தின் அவசியம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. இதன் மூலமாக பிரான்ஸ், இத்தாலி நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வா்த்தகத்தை மேலும் அதிகரிக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT