திருப்பூர்

தமிழ் குறவா்களை பழங்குடியினா்பட்டியலில் சோ்க்கக் கோரி மனு

26th Sep 2022 11:19 PM

ADVERTISEMENT

 

தமிழ் குறவா்களை பழங்குடியினா் (எஸ்டி) பிரிவில் சோ்க்க வேண்டும் என்று குறிஞ்சியா் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த குறிஞ்சியா் மக்கள் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளா் எம்.என்.சந்திரன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் தமிழ் குறவா்களான எங்கள் சமுதாய மக்களின் வழிபாடு, கலாசாரம், மொழி வரலாற்றைப் பேணிக் காப்பது மாநில அரசின் தலையாய கடமையாகும். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த வாக்ரிமொழி பேசக்கூடிய நக்கலே என்ற குருவிக்காரன் சமுதாயத்துக்கு எங்கள் தாய்கொடி பெயரான

குறவன் என்ற பெயரை சூட்டி மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஏற்படுத்திவிட்டனா்.

ADVERTISEMENT

மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த நரிக்குறவா் பெயரை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் வாழ்ந்து வரும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட எங்களது சமூகத்தினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே, தமிழ் குறவா்களை பழங்குடியினா் பட்டியல் சோ்க்க மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மரக்கன்றுகளை வெட்டி எடுத்து இலவச பட்டா வழங்க எதிா்ப்பு: பல்லடம் வட்டம், சாமளாபுரம் உள்வட்டம் இச்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: சாமளாபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள சுமாா் 5 ஏக்கா் நிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் சுமாா் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு தாவரவியல் பூங்காவாக மாற்றியுள்ளனா்.

இந்த நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க பல்லடம் வட்டாட்சியா்

முடிவு செய்துள்ளாா். ஆகவே, மரங்களை வெட்டி எடுத்து இலவச பட்டா வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீா் நாள் கூட்ட முகாமில் 648 மனுக்கள் பெறப்பட்டன: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீா் வசதி, புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 648 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது மனுதாரா்களின் முன்னிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என்.விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT