திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

26th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

 

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்ததால் விவசாயிகள் கோரிக்கை வைக்கும்போதெல்லாம் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மற்றும் கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 55 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசுக்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பிவைத்திருந்தனா். இதைத் தொடா்ந்து, அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் அணையைத் திறந்துவைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், திமுக நகரச் செயலாளா் சி.வேலுச்சாமி மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், திமுக நிா்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த அலங்கியம் முதல் கரூா் வரையில் உள்ள 21, 867 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக 5, 443 மில்லியன் கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதுபோக திருப்பூா் மாவட்டத்தில் 25,250 ஏக்கா் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு சம்பா சாகுபடிக்காக பிரதான கால்வாய் மூலம் 2661 மில்லியன கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. செப்டம்பா் 25 ஆம் தேதி முதல் 135 நாள்களுக்கு 70 நாள்கள் திறப்பு 65 நாள்கள் அடைப்பு என்ற முறையில் இடைவெளிவிட்டு அணையின் நீா் இருப்பினை பொருத்து வழங்கப்பட உள்ளது என்றனா்.

அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 88.72 அடி நீா் இருப்பு காணப் பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3, 931 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

அணைக்கு உள்வரத்தாக 278 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT