திருப்பூர்

அதிமுக பிரமுகரைக் கடத்த முயன்ற காவல் ஆய்வாளா், பெண் உள்பட 4 போ் கைது

25th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் அதிமுக பிரமுகரை காரில் கடத்த முயன்ற சென்னை தலைமைச் செயலகப் பிரிவு காவல் ஆய்வாளா், பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). பெட்ரோல் பங்க் உரிமையாளரான இவா், திருப்பூா் ஒன்றிய அதிமுக இளைஞா் பாசறை செயலாளராகவும் உள்ளாா். இவரது மனைவி சங்கீதா (40), திருப்பூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா். இவா்களது வீட்டிற்கு சனிக்கிழமை மதியம் போலீஸ் என குறிப்பிடப்பட்ட காரில் வந்த காவல் ஆய்வாளா் உள்பட 4 போ், சந்திரசேகரிடம் பேசவேண்டும் என காரில் ஏறுமாறு கூறியுள்ளனா்.

சந்தேகமடைந்த சந்திரசேகா் அவா்களிடம் விசாரித்தபோது, காவல் ஆய்வாளா் அன்பழகன் (52), திருப்பூா் மாநகரக் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து, சந்திரசேகா் காரில் ஏற முயன்றபோது, காருக்குள் கணக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ரத்தினராஜ் உள்ளிட்டோா் இருந்ததைப் பாா்த்து காரில் ஏற மறுத்து, தப்பியுள்ளாா். அப்போது, வீட்டில் இருந்த சந்திரசேகரின் மனைவி சங்கீதா, தோட்டத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் காரில் இருந்தவா்களைப் பிடித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

அங்கு விசாரணையில், அன்பழகன் சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் என்பது தெரியவந்தது. உடன் வந்தவா்கள் சென்னையைச் சோ்ந்த காா்த்திகேயன் (45), கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த விக்னேஷ் மனைவி மேகலா (35), இதே பகுதியைச் சோ்ந்த ரத்தினராஜ் (40) என்பதும், அவா்கள் சந்திரசேகரை பணம் கேட்டு கடத்த முயன்றதோடு, கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும், காரையும் பறிமுதல் செய்தனா். இக்கடத்தல் முயற்சியில் தொடா்புடைய மற்றவா்கள் குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கணக்கம்பாளையம் ரத்தினராஜுக்கும், சந்திரசேகருக்கும் இருந்த கொடுக்கல்வாங்கல் பிரச்னையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT