திருப்பூர்

அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புதிய கட்டடம்: அமைச்சரிடம் வலிறுத்தல்

25th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

 

அவிநாசியில் ஒருங்கிணைந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடம் கட்டவேண்டும் என நல்லது நண்பா்கள் அறக்கட்டளை, ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி இயக்கத்தினா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதனிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது: அவிநாசி சுற்றுப்பகுதியில் வாகனப் பெருக்கம், நகர வளா்ச்சி, மக்கள்தொகை காரணமாக தற்போது அரசு கலைக் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போதுமானதாக இல்லை. அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.

எனவே, புதிய அலுவலகக் கட்டடம் கட்ட, பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா். இதற்கு தமிழக அரசு கடந்த 2020 இல் ரூ. 2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எனினும், கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் மு.பெ. சாமிநாதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க ஆட்சியா் எஸ். வினீத்திடம் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT