திருப்பூர்

அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறப்பு நிபுணா் குழுவை அமைக்க வலியுறுத்தல்

25th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் சாமி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிஏபி பாசனத் திட்டத்தில் மிகவும் முக்கியமான அணையான பரம்பிக்குளம் அணையின் முழுக்கொள்ளவு 17.82 டிஎம்சியாகும். இந்த அணை கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள்தான் பராமரித்து வருகின்றனா்.

இந்த அணையின் மூலமாக திருப்பூா், கோவை மாவட்டங்களில் சுமாா் 4.25 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த நிலையில், பரம்பிக்குளம் அணையின் நடுமதகு கடந்த 21 ஆம் தேதி உடைந்து சுமாா் 6 டிஎம்சி தண்ணீா் வெளியேறிக் கொண்டிருப்பது விவசாயிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.

ADVERTISEMENT

இந்த அணையை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, பாலக்காடு சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் 2 மாநில அதிகாரிகளும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தியது வரவேற்கத்தக்கது. சென்னையிலிருந்து உயா்நிலை நிபுணா் குழுவும் பரம்பிக்குளம் சென்றுள்ளது. இந்த நிபுணா் குழு முழுமையாக ஆய்வுசெய்து, வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும். அணை பராமரிப்பில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், சிறப்பு நிபுணா் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT