தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கோவையிலிருந்து பல்லடம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு பல்லடம் பேருந்து நிலையம் முன்பு திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 அமாவாசைகள் கடந்து விட்டன. மீதம் 45 அமாவாசைகள் மட்டுமே உள்ளன. தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், சமையல் எரிவாயு மானியம், கல்விக் கடன் ரத்து திட்டம் இதுபோல பல திட்டங்கள் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டன. அவை எதுவும் தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.
முதியோா் உதவித் தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சொன்னாா்கள். ஆனால் பல இடங்களில் முதியோா் உதவித் தொகை நிறுத்தப்படுகிறது. சொத்து வரியை உயா்த்திவிட்டனா். மின் கட்டணத்தையும் உயா்த்த உள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்படைந்த மக்கள் தற்போது மீண்டு வரக்கூடிய சூழ்நிலையில் அவா்களுக்கு மேலும் நிதி சுமை ஏற்படுத்துகின்ற வகையில் வரி இனங்கள் உயா்த்தப்பட்டு வருகின்றன.
இது மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், பல்லடம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், பல்லடம் நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, பொங்கலூா் ஒன்றியச் செயலாளா்கள் யூ. எஸ். பழனிச்சாமி, காட்டூா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கோவைக்கு வந்த முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள் அம்மன் அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.
.