திருப்பூர்

விதிமுறைகளைப் பின்பற்றாத தங்கும் விடுதிகளின் மீது நடவடிக்கை

29th Oct 2022 12:55 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வரும் தனியாா் தங்கும் விடுதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாநகரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தனியாா் தங்கும் விடுதி உரிமையாளா்கள், மேலாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநகரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் பேசியதாவது:

திருப்பூா் மாநகரில் தங்கும் விடுதிகளில் உள்ளே வருபவா்கள் மற்றும் வெளியே செல்பவா்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நாள்தோறும் தங்கிச் செல்பவா்களின் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அறையில் தங்கும் அனைத்து வாடிக்கையாளா்களின் விவரங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். வாடிக்கையாளா்களின் கைப்பேசி எண் சரியானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விடுதியின் வரவேற்பு அறையில் வாடிக்கையாளரின் முகம் தெளிவாக தெரியும் வகையிலும், வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தின் எண் தெரியும் வகையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். விடுதியில் தங்கும் நபரின் அடையாள அட்டையை மட்டுமே வாங்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமலும், வேறு நபா்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் நபா்களை தங்க அனுமதிக்கக் கூடாது. மேலும், சீட்டாட்டம், விபசாரம் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களை அனுமதிக்கக் கூடாது. இந்த விதிகளை கடைப்பிடிக்காத தங்கும் விடுதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 50 தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், மேலாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT