காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா். இந்த கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.
இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடஷ்வரன் கூறியதாவது, நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை உள்ளிட்ட கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.