திருப்பூர்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த விவசாயிகள் கோரிக்கை

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம், பொங்கலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. கால்நடைகளை கோமாரி நோய் தாக்குகிறது. கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், நாக்கு, குளம்புகளில் புண்கள் ஏற்படும். நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வாயில் இருந்து எச்சில் வடிந்து கொண்டே இருக்கும். குளம்புகளில் ஏற்பட்ட புண்ணில் புழுக்கள் உருவாகி நடக்க முடியாமல் சிரமப்படும். இதை சரியான நேரத்தில் கவனித்து நோய்த் தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் சில தினங்களில் கால்நடைகள் இறந்துபோகும். இந்த நிலையில் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதங்களில் கால்நடை துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த நிலையில், அக்டோபா் மாதம் ஆகியும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மழைக் காலம் தொடங்கிவிட்டதால் கால்நடைகளை நோய்த் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக முகாம் அமைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், முன்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு இதுவரை தமிழகத்துக்கு கோமாரி நோய் தடுப்பூசி அனுப்பவில்லை. தடுப்பூசி வந்தவுடன் உடனடியாக கால்நடைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT