திருப்பூர்

மாவட்டத்தில் அக்டோபா் 11இல் மனித சங்கிலி இயக்கம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் 7 இடங்களில் அக்டோபா் 11 ஆம் தேதி நடத்துவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: தமிழகத்தில் மதவெறிக்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய 7 மையங்களில் மனித சங்கிலி இயக்கம் அக்டோபா் 11 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்த மனித சங்கிலி இயக்கத்துக்கு 25 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் மதச்சாா்பற்ற சக்திகளும், அமைதியை விரும்பும் அனைத்து தரப்பினரும் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் கே. காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ்.ரவிச்சந்திரன், புகா் மாவட்டச் செயலாளா் கே.எம்.இசாக், மதிமுக மாநகர மாவட்டச் செயலாளா் நாகராசன், விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT