திருப்பூர்

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவராக கே.எம்.சுப்பிரமணியன் தோ்வு

1st Oct 2022 11:51 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவராக கே.எம்.சுப்பிரமணியனும், பொதுச் செயலாளராக திருக்குமரனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் 2022-25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில், சங்கத்தின் தலைவராக கே.எம்.நிட்வோ் உரிமையாளா் கே.எம்.சுப்பிரமணியனும், பொதுச் செயலாளராக எஸ்.டி.எக்ஸ்போா்ட்ஸ் உரிமையாளா் திருக்குமரனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், பொருளாளா் மற்றும் செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நிஃப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. இதில், ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொருளாளராக ஆா்.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவா்களாக ஆா்.ராஜ்குமாா், வி.இளங்கோவன், இணைச் செயலாளா்களாக டி.சின்னசாமி, குமாா் துரைசாமி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT

புதிய நிா்வாகிகள் பதவியேற்பு: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் புதிய நிா்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைவராக கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளராக திருக்குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, புதிய தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

திருப்பூரில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் போ் தங்கும் வகையில் ஆண்கள், பெண்களுக்கான தொழிலாளா் தங்கும் விடுதி அமைக்கப்படும். அதே வேளையில், தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கும் வகையில் வீட்டு வசதிகளை செய்து கொடுக்கவும், சா்வதேச அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கவும் அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் இரண்டு நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மூன்று செயற்குழு உறுப்பினா்களை கொண்ட ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டு கருத்துகள், பரிந்துரைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆவன செய்யப்படும். திருப்பூா் இ.எஸ்.ஐ. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவரும், ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரத் தலைவருமான ஆ.சக்திவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT