திருப்பூர்

தாராபுரம் நகா்மன்றக் கூட்டம்குத்தகை தொகையை குறைத்து வருவாயை கூட்ட முடிவு

1st Oct 2022 05:08 AM

ADVERTISEMENT

தாராபுரம் நகராட்சியில் ஏலம்போகாத கடைகள் உள்ளிட்ட குத்தகை இனங்களின் குத்தகை தொகையைக் குறைத்து, வருவாய் ஈட்டுவதற்கு தாராபுரம் நகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் கு. பாப்புகண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் வே. ராமா், நகா்மன்ற துணைத் தலைவா் ரவிச்சந்தின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தண்ணீா்த் தொட்டி, குடிநீா்க் குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகா்மன்றத் தலைவா் கு. பாப்புகண்ணன் பேசியதாவது: தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவுக் கட்டணம், கட்டணக் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு குத்தகை இனங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முறை ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும், இதுவரை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால், நகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தொகையைக் குறைத்தால், குத்தகை எடுப்பதற்கு ஒப்பந்ததாரா்கள் முன்வந்துள்ளதால், நகராட்சி நிா்வாகம் குத்தகைத் தொகையை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம், தாராபுரம் நகராட்சிக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 50 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ADVERTISEMENT

நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 4 நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ரூ. 26 லட்சத்தில் ஒலிபெருக்கி மற்றும் ஒலிப்பதிவு செய்யும் வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வகுப்பறைகள்தோறும் பொருத்தப்படவுள்ளன. இதன்மூலம், மாணவா்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா எனவும், பாலியல் குற்றங்கள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் மற்றும் ஆசிரியா்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருகிறாா்களா எனவும் தலைமையாசிரியா் கண்காணிக்க முடியும்.

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரால் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பணியின்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால் கால்வாய்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. இவை ரூ. 34 லட்சத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ளன என்றாா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT