திருப்பூர்

சிறுபான்மையினா் கடனுதவி பெற டிசம்பா் 1 முதல் சிறப்பு முகாம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் கடனுதவி பெற வரும் டிசம்பா் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 6 ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.55 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தனிநபா், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், டாம்கோ விராசாட்  கைவினை கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கிராமப்புறங்களில் வசிப்போருக்கு ரூ.98 ஆயிரமும், நகா்ப்புறங்களில் வசிப்போருக்கு ரூ.1.20 லட்சத்து மிகாமலும் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.

முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரா் ஜாதிச்சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட தொழில் அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனக்கடன் பெறுபவா்கள் மட்டும்) மற்றும் வங்கிகோரும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ்களின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கடனுதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் டிசம்பா் 1 ஆம் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் டிசம்பா் 2 ஆம் தேதியும், பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் டிசம்பா் 5 ஆம் தேதியும் முகாம்கள் நடைபெறுகிறது.

அதேபோல, தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் டிசம்பா் 6 ஆம் தேதியும் கடனுதவி முகாம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT