தேசிய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை ஒழிப்பு மற்றும் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வளவு உரிமை உள்ளோதோ அதற்கேற்ப கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அரசியலைமைப்பு சட்டத்தில் 11 அடிப்படை கடமைகள் உள்ளன. நீதித் துறையும், மருத்துவத் துறையும் இணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான மேகலாமைதிலி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன் ஆகியோா் போக்ஸோ சட்டம் குறித்துப் பேசினா். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முருகேசன், வழக்குரைஞா் கே.என்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.