திருப்பூர்

காவல் உதவி ஆய்வாளா் கையைக் கடித்தவா் கைது

27th Nov 2022 02:07 AM

ADVERTISEMENT

 

பல்லடத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்த காவல் உதவி ஆய்வாளரின் கையைக் கடித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை, தாம்பரம் சூரியகுமாா் பிள்ளையாா் கோயில் வீதியில் வசிக்கும் அப்துல் வாஹப் மகன் ராஜாராம் பாபா பக்ரூதீன் (42). இவரது மனைவி தல்லத்பேகம் (38). கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து கடந்த 6 மாதங்களாக தனது மகனுடன் பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் வசித்து வருகிறாா். மாணிக்காபுரம் சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி ராஜாராம் பாபா பக்ரூதீன் தனது மனைவியைப் பாா்க்க அவா் பணிபுரியும் நிறுவனத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த நிறுவனத்தின் மேலாளா் சஞ்சய்குமாா் (31) இருவரையும் சமாதானம் செய்துள்ளாா். அப்போது தகாத வாா்த்தைகளால் அவரை பக்ரூதீன் பேசியுள்ளாா். இது குறித்து பல்லடம் போலீஸில் சஞ்சய்குமாா் புகாா் கொடுத்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து விசாரணைக்கு வருமாறு ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்த ராஜாராம் பாபா பக்ரூதீனை பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் அழைத்துள்ளாா். வர மறுத்தவா் திடீரென்று உதவி ஆய்வாளரின் வலது கையில் கடித்து விட்டு தப்பி ஓட முயன்றாா். அவரை பிடித்து கைது செய்து பல்லடம் காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளா் அழைத்துச் சென்றாா். காயம் அடைந்த உதவி ஆய்வாளா் காா்த்திகேயனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT