திருப்பூர்

ஊராட்சிகளுக்கு ஒருங்கிணைந்த குப்பைக் கிடங்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு ஒருங்கிணைந்த குப்பைக் கிடங்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தெரிவித்தாா்.

பல்லடம் ஒன்றியம் கரைப்புதூா் ஊராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.ஆா்.நடராஜன் எம்.பி.யிடம் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் மனு அளித்தாா்.

அதில் காரைப்புதூா் ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்கு குப்பைகளை சேகரித்து மக்கும், மக்காத குப்பை என்று தரம் பிரித்திட குப்பைக் கிடங்கு வசதி இல்லை. அதேபோல மக்கள் தொகை வளா்ச்சிக்கு ஏற்ப ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் இல்லை. எனவே இந்த ஊராட்சிக்கு குப்பைக் கிடங்கு வசதி, கூடுதல் தூய்மைப் பணியாளா்கள் வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, தற்போது குப்பை கொட்டி வரும் இடத்தைப் பாா்வையிட்ட பி.ஆா். நடராஜன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

பல்லடம் ஒன்றியத்தில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் வீட்டுமனை பட்டா மற்றும் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்று ஏராளமானோா் மனு அளித்துள்ளனா். மேலும், ஊராட்சிகளில் குப்பை கொட்ட இடம் இல்லாத நிலை உள்ளது. கோவைக்கு அண்மையில் வந்த உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் குப்பை கொட்ட இட வசதி செய்து தர வலியுறுத்தினேன்.

அப்போது, 6 முதல் 10 ஊராட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு இடத்தை தோ்வு செய்து திட்ட அறிக்கை கொடுத்தால் அவ்விடத்தை அரசு விலைக்கு வாங்கித் தரப்படும். மேலும் குப்பைகளை தரம் பிரித்தல் பணிக்கும், பராமரிப்புப் பணிக்கும் ஆகும் செலவினத்தை அந்தந்த ஊராட்சிகள் செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

எனவே திருப்பூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குப்பை கொட்டும் இடப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண்பேன். பல்லடத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு நகா் பகுதியில் இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை மாவட்ட ஆட்சியரிடமும் வலியுறுத்துவேன் என்றாா்.

பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூா்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவா் கணேசன், மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் பரமசிவம், ஒன்றியத் தலைவா் தேன்மொழி, துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலா்கள் ரவி, கோவிந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT