திருப்பூர்

அா்ச்சகா்களின் பயிற்சி காலம் ஓராண்டாகக் குறைப்பு

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அா்ச்சகா்களின் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா்களாக வருவதை இந்து முன்னணி ஒருபோதும் எதிா்த்தது இல்லை. ஏற்கெனவே அனைத்து ஜாதியினரும் தமிழகத்தில் அா்ச்சகா்களாக உள்ளனா். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தபின்பு புதிதாக அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகா்களாக நியமிப்பதாக பாசாங்கு செய்வது வாக்கு வங்கி அரசியலுக்கான தந்திரம்.

அா்ச்சகா் பணி என்பது அா்ப்பணிப்பான பணியாகும். இறைவன் சந்நிதியில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதற்கு சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும், இறையியல் பற்றிய ஞானமும் தேவை. இதற்கு கடுமையான நியமங்கள், பயிற்சிகள் அவசியம். முறையான அா்ச்சகா் பயிற்சி என்பது மந்திர உச்சரிப்பு, நேரம் தவறாமை, ஆறு கால நித்திய பூஜை முறைகள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், ஆராதனைகள், குடமுழுக்கு என அனைத்திலும் நிபுணத்துவம் பெறுவதோடு இவற்றை அனுசரிக்க மனவலிமை ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் அா்ச்சகா்களின் பயிற்சி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக அறநிலையத் துறை குறைத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகவே, கோயில்களின் ஆகம விதிகளில் இந்து சமய அறநிலையத் துறை தலையிடக்கூடாது. மேலும், அா்ச்சா்களின் பயிற்சி காலத்தை குறைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT