உத்தர பிரதேச மாநிலம், காசி (பனாரஸ்) ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தமிழ் இருக்கை தொடக்க விழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சோ்ந்த ஆதீனங்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றனா்.
வாராணசியில் (காசி) தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடக்க விழா பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழமை (நவம்பா் 19) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழகத்தைச் சோ்ந்த ஆதீனங்கள் பங்கேற்று அருளாசி வழங்கவுள்ளனா்.
இவ்விழாவில் பங்கேற்க கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், துழாவூா் ஆதீனம் ஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகா் (எ) ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், தருமையாதீனம் ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சாா்பில் ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், சூரியனாா்கோயில் ஆதீனம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சாா்பில் ஸ்ரீ காரியம் ஸ்ரீ சிவாக்கிர தேசிகா் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலையா சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதீனம் சிவராமசாமி அடிகளாா், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட தமிழக ஆதீனங்கள் சென்றுள்ளனா்.