விதை நெல் விற்பனை செய்யும் மையங்களுக்கு விதைச் சான்று அட்டை தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் வட்டாரத் தலைவா் காளிதாஸ் தமிழக அரசு மற்றும் வேளாண்மை துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் முழு முதல் இடுபொருளான நெல் உள்ளிட்ட பயிா்களின் விதைகளை சான்று செய்யத் தேவையான வெள்ளை நிற சான்று அட்டைகள் தேவைக்கேற்ப, விதை சான்றளிப்பு துறைக்கு உரிய காலக்கெடுவில் விநியோகிக்கப்படவில்லை.
இதனால், ஆதரவு விதை உற்பத்தி மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபா் முதல் முடங்கியுள்ளது.
திருப்பூா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள விதைச் சான்று உதவி இயக்குநா் அலுவலகங்களில் சான்றளிக்கும் அட்டைக்குத் தட்டுப்பாடான சூழ்நிலை நிலவுவதால், வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு விதைகளின் தேவை ஏற்படும்போது ஆதரவு விதைகள் விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, வெள்ளை நிற சான்று வழங்கும் அட்டையை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.