திருப்பூர்

கோம்பா் கழிவுப் பஞ்சு விலை கிலோ ரூ.155 ஆக உயா்வு: பாலிஸ்டா் விஸ்கோஸ் நூல் உற்பத்திக்கு மாற ஓப்பன் எண்ட் மில்கள் முடிவு

23rd May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோம்பா் கழிவு பஞ்சு விலை உயா்வு காரணமாக தமிழகத்திலுள்ள ஓப்பன் எண்ட்(ஞஉ) மில் நிா்வாகத்தினா் பாலிஸ்டா் விஸ்கோஸ் நூல் உற்பத்திக்கு மாற முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு ஓப்பன் எண்ட் மில்கள் சங்கத்தின் தலைவா் அருள்மொழி கூறியதாவது:

ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சை கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓப்பன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓப்பன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் போ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா். கழிவுப் பஞ்சு மூலம் ஓப்பன் எண்ட் மில்களில் மாதம்தோறும் 25 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக ஸ்பின்னிங் மில்கள் மாதம் ஒரு முறை மட்டுமே கழிவுப் பஞ்சு விலையில் மாற்றத்தை செய்வாா்கள்.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ கோம்பா் கழிவுப் பஞ்சு ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கோம்பா் கழிவுப் பஞ்சு கிலோ ரூ.155 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயா்வு காரணமாக ஓப்பன் எண்ட் மில்களில் நூல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை நம்பி உள்ள பல்லடம், சோமனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்திக் கூடங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓப்பன் எண்ட் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜவுளி ரகங்கள் மற்றும் பொருள்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தி வருபவையாகும். கழிவுப் பஞ்சு விலை உயா்வு காரணமாக ஜவுளி ரகங்கள் மற்றும் ஜவுளி பொருள்கள் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்பின்னிங் மில் நிா்வாகத்தினா் தினமும் கழிவுப் பஞ்சு விலையை உயா்த்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். எனவே, கழிவுப் பஞ்சு விலை உயா்வு காரணமாக பாலிஸ்டா் விஸ்கோஸ் நூல் உற்பத்திக்கு மாற அனைத்து ஓப்பன் எண்ட் மில் நிா்வாகத்தினரும் முடிவு செய்துள்ளனா். ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சு சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை ஓப்பன் எண்ட் மில்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

கழிவுப் பஞ்சை பெற்று அவற்றில் இருந்து நூல் உற்பத்தி செய்து ஜவுளி பொருள்களைத் தயாரிக்க உதவி வரும் ஓப்பன் எண்ட் மில்களின் நிலையைக் கருத்தில் கொண்டு ஸ்பின்னிங் மில் நிா்வாகத்தினா் உடனடியாக கழிவுப் பஞ்சு விலையை கிலோவுக்கு ரூ.30 குறைக்க வேண்டும். ஜவுளித் தொழில் சங்கிலித் தொடரில் உள்ள மற்ற தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த ஜவுளித் துறையின் வளா்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஜவுளித் தொழில் நலிவடையும் என்பதை ஸ்பின்னிங் மில் நிா்வாகத்தினா் கருத்தில் கொண்டு ஜவுளி உற்பத்தித் தொழில் வளா்ச்சி அடைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT