திருப்பூர்

திருப்பூா் அருகே டாஸ்மாக் மதுக்கூடத்தை முற்றுகையிட்ட பாஜகவினா்

23rd May 2022 12:02 AM

ADVERTISEMENT

 

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள இடுவாய் கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து டாஸ்மாக் மதுக்கூடத்தை பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா், மங்கலம் அருகே உள்ள இடுவாய் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக்கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தக் கடையானது குடியிருப்பு பகுதியில் இருப்பதாலும், அதிகாலை நேரங்களில் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்து கிடக்கும் நபா்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலை விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆகவே, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், இடுவாய் டாஸ்மாக் மதுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. இதைக் கண்டித்து பாஜக மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் தலைமையில் அக்கட்சியினா் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மங்கலம் காவல் துறையினா் மது விற்பனையில் ஈடுபட்ட ஊழியா்கள் இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் காரணமாக இடுவாய் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT