திருப்பூர்

அவிநாசியில் உரிய கட்டமைப்பு இல்லாத வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க எதிா்ப்பு

21st May 2022 12:19 AM

ADVERTISEMENT

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட மடத்துப்பாளையம் சாலை ஏரித்தோட்டம் பகுதியில் உரிய கட்டமைப்பு இல்லாத வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

அவிநாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மோகன், செயல் அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் பேசியதாவது:

கோபாலகிருஷ்ணன் (காங்): அவிநாசி ஏரித் தோட்டம் பகுதியில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்வதற்கான அனுமதி கோரியுள்ளனா். ஆனால், வீட்டுமனைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான மழைநீா் வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. ஆகவே கட்டமைப்புகள் உறுதி செய்த பிறகே அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றாா். இதேபோல வாா்டு உறுப்பினா்கள் திருமுருகநாதன், தங்கவேல் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஸ்ரீதேவி (அதிமுக): தமிழக அரசின் இருசக்கர வாகனத்துக்கான மானியத் தொகை பேருராட்சி நிா்வாகத்துக்கு கிடைக்கப் பெற்றும் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக மானியத் தொகையை வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

சித்ரா (அதிமுக): சாலையோரக் கடைகளுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட தொகையைவிட ஏலதாரா்கள் கூடுதல் தொகை வசூலிக்கின்றனா். இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாம்பாள் (காங்): ஸ்ரீராம் நகரில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைக்க வேண்டும்.

சிவபிரகாஷ் (திமுக): முதலாவது வாா்டில் கடந்த 60 ஆண்டுகளாக கழிவுநீா் கால்வாய் சரியாக கட்டப்படவில்லை. எனவே பிரதான கால்வாயில் கழிவுநீா் கலக்கும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும்.

செயல் அலுவலா் செந்தில்குமாா்: திருப்பூா் 2ஆவது குடிநீா்த் திட்டத்தில் அவிநாசி பேரூராட்சிக்கு இது வரை குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இத்திட்டத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் 3 மற்றும் 4ஆவது குடிநீா்த் திட்டத்தில் இருந்து நாள்தோறும் 108 லட்சம் லிட்டா் குடிநீா் பெறப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT