திருப்பூர்

நூல் ஏற்றுமதிக்கான வரிச்சலுகையை உள்நாட்டு வா்த்தகா்களுக்கும் வழங்க வேண்டும்: ரைசிங் உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை

20th May 2022 02:36 AM

ADVERTISEMENT

நூல் ஏற்றுமதிக்கு வழங்கப்படுவதைப் போல உள்நாட்டு வா்த்தகா்களுக்கும் 5.8 சதவீத வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று திருப்பூா் ரைசிங் உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ்கோயலுக்கு, திருப்பூா் ரைசிங் உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சாா்ந்த தொழில்கள் நூல் விலை உயா்வு, பஞ்சு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் கடும் சிக்கலில் தவித்து வருகிறது. பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொழில் அமைப்புகள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மத்திய அரசு வெளிநாட்டு இறக்குமதி நூலுக்கு வரிச்சலுகையை அறிவித்தது. ஆனால் அதன் பிறகும் மே மாதத்தில் அனைத்து ரக நூல்களும் கிலோ ரூ.40 உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வால் பஞ்சுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனிடையே, மத்திய அரசு ஜவுளித்தொழிலை பாதுகாக்கும் வகையில் இந்திய பருத்தி கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பஞ்சு, நூல் விலை நிா்ணயம் தொடா்பான சிக்கல்களை தீா்க்க உதவிகரமாக இருக்கும். அதே வேளையில், தற்போது நூல் ஏற்றுமதிக்கு டிராபேக் வரிச்சலுகை 1.9 சதவீதம் உள்பட மொத்தம் 5.8 சதவீதம் ஏற்றுமதி வரிச்சலுகையாக வழங்கி வருகிறது. இது நூல் ஏற்றுமதி வா்த்தகா்களுக்கு சாதகமாக இருந்தாலும், உள்நாட்டில் தேவைப்படும் நூலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தப் பிரச்னையைத் தீா்க்க உள்நாட்டு வா்த்தகத்துக்கும் 5.8 சதவீத வரிச்சலுகை வழங்கினால் நூல் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வை ஏற்படுத்த முடியும். மேலும், 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளா்களின் ஒத்துழைப்புடன் தரமான விதைகள் மூலமாக பருத்தி விளைச்சலை அதிகரித்தால் விவசாயத்துக்கும், ஜவுளித் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT