திருப்பூர்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் தெப்போற்சவத் திருவிழா

16th May 2022 09:15 PM

ADVERTISEMENT

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி, தெப்போற்சவத் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாள்களில் அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க- ‘அடுத்த 2 மாதங்கள் வாழ்வில் கடினமானதாக இருக்கும்’: இலங்கை பிரதமர் உரை

ADVERTISEMENT

திங்கள்கிழமை தெப்போற்சவத் திருவிழா நடைபெற்றது. இதில் மாலை 6 மணிக்கு சந்திரசேகரர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று, சுவாமி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து, நீர் நிரப்பட்டிருந்த தெப்பத்தில், அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி, தெப்போற்சவம் நடைபெற்றது.

 

அப்போது தெப்பக்குளம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது.

சுவாமி தெப்பத்தை வலம் வரும் போது, மல்லாரி, ஓடம், கீர்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டது.

இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை 3 மணி முதலே தெப்பப் படிக்கட்டுகளில் காத்திருந்து சுவாமிக்கு மலர் தூவி தரிசனம் செய்தனர். செவ்வாய்க்கிழமை நடராஜர் தரிசனம், புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, 108 திருவிளக்கு பூஜை, மயில்வாகனக் காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT