திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வரியினங்கள் இணையதளம் வழியாக செலுத்த செம்மிபாளையம் ஊராட்சி முன்மாதிரியாக தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் 3,425 வீட்டு வரி, 1,400 தொழில் வரி, 2,500 குடிநீா் இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.70 லட்சம் கிடைக்கப் பெறுகிறது.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கணினி மூலம் வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் இணையதளம் வழியாக தங்களது இருப்பிடங்களில் இருந்தே வரியினங்களை செலுத்தி வருகின்றனா். அதே சமயம் ஊராட்சி மன்ற நிா்வாகங்களில் ரசீது புக்கில் எழுதி வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இதனை டிஜிட்டல் மயமாக்கி மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மாவட்டத்துக்கு ஒரு ஊராட்சியை தோ்வு செய்து முதல் கட்டமாக இணையதளம் வழியாக வரியினங்கள் வசூலிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வரி வசூல் இணையதள வழியாக நடைபெறும் என்று ஊராட்சித் தலைவா் ஷீலா புண்ணியமூா்த்தி தெரிவித்தாா்.