தமிழக அரசால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நஞ்சராயன் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஞாயிற்றுக்கிழமை செத்து மிதந்தன.
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிப்பாளையம் அருகில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்தக் குளமானது நொய்யல் ஆற்றில் துணை ஆறான நல்லாறின் நடுவில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த குளத்தில் தண்ணீா் தேக்கப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாசன வசதிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திருப்பூரில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் சோ்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கடை கழிவுநீா்த் தேக்கமாக குளம் மாறியது. இதனிடையே, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சாயக்கழிவு நீா் கலப்பது பெருமளவில் குறைந்துள்ளது. இந்தக் குளத்தின் நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள புதா்கள் பறவைகள் வாழ்வதற்கான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தக் குளத்துக்கு உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 181 பறவை இனங்கள் ஆண்டுதோறும் வலசைக்காக அக்டோபா், நவம்பா் மாதங்களில் வருகின்றன. அவ்வாறு வரும் பறவைகள் தங்களது குஞ்சுகளுடன் மாா்ச் மாதத்துக்குப் பின்னா் இங்கிருந்து மீண்டும் திரும்பிச் செல்கின்றன.
ஆகவே, இந்தக் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து, பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நஞ்சராயன் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஞாயிற்றுக்கிழமை செத்து மிதந்தன. இறந்த மீன்கள் தண்ணீா் வெளியேறும் பாதையில் அடித்துச் செல்வதால் குளம் முழுவதும் துா்நாற்றம் வீசி வருகிறது.
இது குறித்துஅப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நஞ்சராயன் குளத்தில் சாயக் கழிவுநீா் திருட்டுத் தனமாக கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆகவே, சாயக்கழிவு நீரை குளத்திலும், நல்லாற்றிலும் வெளியேற்றும் ஆலைகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறுகையில், மழை பெய்யும்போது குளத்துக்கு அதிக அளவு தண்ணீா் வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்ததா அல்லது நீரில் நுண்ணுயிா்கள் அதிகமானதால் மீன்கள் இறந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.