திருப்பூா்: திருப்பூரில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம், எல்லநள்ளியை அடுத்த அருவங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.பிரசாந்த் (22). இவா், திருப்பூா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் கே.மதுசூதனன் என்பவரின் கைபேசியை பறித்துச் சென்ற வழக்கில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், பிரசாந்த் மீது நல்லூா் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், நீலகிரி மாவட்டம், கேத்தி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கும், திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும் என மொத்தம் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, பொது ஒழுங்கிற்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்ததால் பிரசாந்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாந்திடம் காவல் துறையினா் புதன்கிழமை நேரில் வழங்கினா். திருப்பூா் மாநகரில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக தற்போது வரையில் 36 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.