திருப்பூர்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

5th May 2022 01:00 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: திருப்பூா் ஆலங்காடு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ஆலங்காடு பகுதியில் 216 குடும்பத்தினா் புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்தும், வீடுகள் கட்டியும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனா். இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ஆலங்காடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளைக் காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் குடியிருப்பு வாசிகளுக்கு பலவஞ்சிபாளையம் அடுக்குமாடிக் குடியிருப்பில் சலுகை விலையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆலங்காடு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை காலையில் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனா். இதுகுறித்த தகவலின்பேரில் அப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ, மாணவியா் என 200க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது வீடுகளை காலி செய்ய 3 மாத அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக உயா் அதிகாரிகளிடம் பேசி முடிவை அறிவிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து சாலை மறியலைக் கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனா்.

 

Image Caption

திருப்பூா் ஆலங்காடு  பகுதியில்  வீடுகளை  இடிக்க  எதிா்ப்பு  தெரிவித்து   சாலை மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT