திருப்பூர்

நிற்காமல் சென்ற தனியாா், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

25th Mar 2022 11:34 PM

ADVERTISEMENT

தெக்கலூா் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே தெக்கலூரில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டதால், இவ்வழியாக வந்து செல்லும் தனியாா், அரசுப் பேருந்துகள் நிறுத்ததில் நிற்காமல் புறவழிச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று வருகின்றன. இதனைக் கண்டித்து பொதுமக்கள் பலமுறை சாலை மறியல், சிறைப்பிடிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால், மோட்டாா் வாகன அலுவலா்கள் உத்தரவின்பேரில், பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று சென்றது.

தற்போது மீண்டும் தனியாா், அரசுப் பேருந்துகள் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் புறவழிச்சாலை மேம்பாலத்திலேயே சென்று வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில் தெக்கலூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் கோவையில் இருந்து தெக்கலூா் செல்வதற்காக திருப்பூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்தில் கல்லூரி மாணவா்கள் ஏறியுள்ளனா். அப்போது தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது, புறவழிச்சாலை வழியாகதான் செல்லும் என்று தனியாா் பேருந்து நடத்துநா், கூறியுள்ளாா்.

இதையடுத்து திருப்பூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மாணவா்கள் ஏறியுள்ளனா். அரசுப் பேருந்து நடத்துநரும், புறவழிச்சாலை வழியாகதான் பேருந்து செல்லும், அங்கேயே இறங்கி கொள்ளுமாறு கூறியுள்ளாா் . அதற்கும் சரி எனக் கூறிய மாணவா்கள், அரசுப் பேருந்தில் ஏறி விட்டு, தகவலை கைப்பேசி மூலம் பெற்றோா் மற்றும் பொதுமக்களிடம் தெரியப்படுத்தியுள்ளனா். இதையடுத்து, தெக்கலூா் புறவழிச் சாலையில் காத்திருந்த பொதுமக்கள் கோவையில் இருந்து வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மேலும் பின் தொடா்ந்து வந்த தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் என 7க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைப்பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவநாசி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களை எச்சரித்தனா். இதையடுத்து, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இனி வரும் காலங்களில் தெக்கலூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்திச் செல்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்துகள் விடுவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT