திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளி வாசல் மூட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் இஸ்லாமியர்கள் பேரணியாக வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அதை மூட வேண்டியும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளிவாசலை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் வியாழக்கிழமை காலை காவல் துறையினர் மற்றும் அலுவலர்கள் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக சென்றார்கள். ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை. பள்ளிவாசலுக்குள் இருந்துகொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
காவல் துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சீல் வைக்க முயன்றார்கள். இதற்குள்ளாக, இந்த தகவல் பரவி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.
மேகும், மறியலில் ஈடுபட்டார்கள். மறியலுக்கு பிறகு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் பழைய பேருந்து நிலையம் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாக வந்தார்கள்.
இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
மாநகராட்சி சிக்னலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பள்ளிவாசல் மூடப்படுவதை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.