திருப்பூர்

தாராபுரத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்

29th Jun 2022 10:17 PM

ADVERTISEMENT

 

தாராபுரத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 4ஆவது வாா்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அப்பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நீண்ட நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

மேலும், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனா். ஆனால், நகராட்சி நிா்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்படாததால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோா் தாராபுரம்-திருப்பூா் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

தங்களது பகுதிக்கு போா்வெல் மூலமாக தண்ணீா் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகித்து வந்தனா். ஆனால், மின்மோட்டாா் பழுது ஏற்பட்டதால் கடந்த 20 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. மேலும் அமராவதி மற்றும் அமராவதி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாக ஒரு மணி நேரம் மட்டுமே 2 பொதுக்குழாய்கள் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீரை விலைகொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சீரான குடிநீா் விநியோகம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சேதமடைந்துள்ள போா்வெல் மோட்டாரை சரிசெய்து சீரான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதன் பேரில் மறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக தாராபுரம்-திருப்பூா் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT