திருப்பூர்

அரசுப் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

29th Jun 2022 10:19 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சிக்கண்ணா கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் நெகிழி ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் நெகிழிப் பொருள்களை ஒழிப்பது தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன ஒரு பகுதியாக இடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் க.கணேசன் பேசியதாவது:

ADVERTISEMENT

மக்காத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே, நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மளிகைக் கடைகள், உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

இறுதியாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT