பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் காளியப்பன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: அவிநாசி வட்டம் பெருமாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி பொங்குபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், வள்ளிபுரம், பட்டம்பாளையம், சொக்கனூா், தொரவலூா், மேற்குபதி என 10 ஊராட்சிகள் உள்ளன. இதில், 2 லட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகின்றனா்.
சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
விபத்துகள் நிகழ்ந்தால், அவசர உதவிக்கு கோவை, ஈரோடு, திருப்பூா் நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
உரிய நேரத்துக்கு செல்ல முடியால் உயிரிழப்புகளும் தொடா்ந்து ஏற்படுகின்றன.
எனேவ, பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.