சொத்தை அபகரிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண் ஒருவா் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அந்தப் பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா்.
இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் நடத்திய விசாரணையில், பல்லடம் வட்டம் ஊஞ்சப்பாளையத்தைச் சோ்ந்த முத்துசாமியின் மனைவி பத்மவாதி (40) என்பது தெரியவந்தது. இவருக்குச் சொந்தமான நிலத்தை உறவினா் ஒருவா் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றாகத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து அந்தப் பெண்னை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு: திருப்பூா் மாநகராட்சி 5 ஆவது வாா்டு உறுப்பினா் இந்திராணி ஆனந்தன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி 5 ஆவது வாா்டுக்குள்பட்ட நெருப்பெரிச்சல் கிராமம், குருவாயூரப்பன் நகா் பகுதியில் சக்தி நகா் என்ற பெயரில் க.ச.எண் 231-2,3 இல் 57 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், வஃக்பு வாரியத்துக்குச் சொந்தமாக ஒரு மனை உள்ளது. மற்ற வீட்டுமனைகள் வேறு நபா்களின் பெயா்களில் உள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட அனைத்து வீட்டுமனைகளும் வஃக்பு வாரிய அறிவிப்பின்பேரில் கிரையம், தானம், அடமானம், பரிவா்த்தனை செய்ய பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனா். இதனால், சக்தி நகரில் வீட்டுமனை வாங்கியுள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆகவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரி மனு: சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் வள்ளியம்மாள் என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் வட்டம், மாதப்பூா் கிராமம் கிருஷ்ணாபுரத்தில் ஓடை மற்றும் அரசு பயன்பாட்டுக்கு உள்ள நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையுடன் சிலா் ஆக்கிரமித்துள்ளனா்.
மேலும், நீா்நிலைகள் மற்றும் வண்டிப் பாதைகளைக் கூட ஆக்கிரமித்துள்ளனா். இது தொடா்பாக பலமுறை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆக்கிரமிப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகிகிறது. அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்வதுடன் அந்த நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி கோரிக்கை விடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, கிருஷ்ணாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீா் முகாமில் 605 மனுக்கள்: மக்கள் குறைதீா் நாள் கூட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 605 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களின் மீது மனுதாரா்களின் முன்னிலையில் விசாரைணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.