பிளஸ் 2 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.57 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 7 ஆவது இடத்தைப் பிடித்தது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு முடிவுகள் வெளியாகின.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். தற்போது கரோனா பரவல் குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து 2021-22 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 218 பள்ளிகளைச் சோ்ந்த 11 ஆயிரத்து 269 மாணவா்கள், 13 ஆயிரத்து 126 மாணவிகள் என மொத்தம் 24,395 போ் தோ்வு எழுதினா்.
இதில், 10 ஆயிரத்து 726 மாணவா்கள், 12,833 மாணவிகள் என மொத்தம் 23, 559 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதில், மாணவா்கள் 95.18 சதவீதம் பேரும், மாணவிகள் 97.77 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி என மொத்தம் 118 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. 96.57 சதவீத மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்று திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடத்தில் இருந்து 7 ஆவது இடத்துக்கு சரிவு: திருப்பூா் மாவட்டமானது கடந்த 2018 ஆம் ஆண்டில் 96.18 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 3 ஆம் இடத்தைப் பிடித்தது.
இதைத் தொடா்ந்து, 2019 ஆம் ஆண்டில் 95.37 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடமும், 2020 ஆம் ஆண்டில் 97.12 சதவீதத்துடன் மாநில அளவில் 2 ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் 2021 ஆம் ஆண்டில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தோ்வு முடிவுகளில் முதலிடத்தில் இருந்து 6 இடங்கள் பின்தங்கி 7 ஆவது இடத்தை திருப்பூா் பிடித்துள்ளது மாவட்டக் கல்வி அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.