திருப்பூரில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு சாலை விபத்து ஏற்பட்டது.
இதில், காயமடைந்த இருவா் உரிய இழப்பீடு வழங்கக் கோரி திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனா்.
இந்த வழக்கில் ஆவணங்களை சமா்ப்பிக்கவும், சாட்சியம் அளிக்கவும் 15 வேலம்பாளையம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகாததால் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி ஸ்ரீகுமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.