திருப்பூா் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டி வரும் ஜூன் 18,19 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட சதுரங்க கழக செயலாளா் சிவன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
44 ஆவது ஃபிடோ சதுரங்க ஒலிம்பியாட் 2022 போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியினை நேரில் கண்டுகளிக்கும் வகையில் திருப்பூா் மாவட்ட பள்ளிகளில் பயிலும் 15 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் தாராபுரம் சாலையில் உள்ள ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் வரும் ஜூன் 18,19 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை அனைத்திந்திய சதுரங்க கழகம், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகம் ஆகியன இணைந்து நடத்துகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் 15 வயதுக்கு உட்பட்ட மாணவா், மாணவிகள் தனித்தனி பிரிவுகளில் பங்கேற்கலாம்.
இதில், முதலிடம் பிடிப்பவா்கள் சென்னை சென்றுவர பயணப்படியாக ரூ.1,000 மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாள் தங்குமிடம், உணவு ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவதுடன், சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளையும் கண்டுகளிக்கவும் அழைத்துச் செல்லப்படுவாா்கள். மேலும், முதல் 25 இடங்களைப் பிடிக்கும் வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. நுழைவுக்கட்டணம் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் அனைத்திந்திய சதுரங்க கழகத்தின் உறுப்பினா் அடையாள எண் மட்டும் போதுமானதாகும். இந்தப் போட்டியில் பங்கேற்க 98433-31032, 87782-01812 ஆகிய கைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.