தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் கான்கிரீட் கலவை கொட்டி மூடப்படாததால் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் இருந்து தாராபுரம் சாலையில் உள்ள குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூா் சோதனைச்சாவடி வரையில் 4 வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒத்தக்கடை பகுதியிலிருந்து குண்டடத்துக்கு முன்பு வரையில் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் பாலங்கள் அமைக்கும் பணிகளுக்காக பள்ளங்களைத் தோண்டியுள்ளனா். இந்தப் பள்ளங்கள் தோண்டப்பட்டு 10 நாள்களைக் கடந்த நிலையிலும் கான்கிரீட் கற்களைக் கொண்டு சமன் செய்யப்படாததால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் நபா்கள் பள்ளங்களில் விழுந்து காயமடைந்து வருகின்றனா். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து பள்ளங்களை சமன் செய்து சாலை விபத்துகளைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.