திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்குரைஞா், அவரது மனைவி மற்றும் 3 மாத குழந்தை உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், பெரம்பலூா் கம்பன் வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). திண்டுக்கல்லில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், மணிகண்டன், தனது மனைவி மோதுமணி (23), மகள் ருத்ரா(3), மூன்று மாத குழந்தை ஆகியோருடன் உறவினரின் திருமண விழாவுக்காக காரில் கோவைக்கு வந்துவிட்டு திங்கள்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
தாராபுரத்தை அடுத்த சாலக்கடை அருகே வந்து கொண்டிருந்தபோது மேம்பாலத்தில் இருந்த தடுப்பின் மீது காா் மோதியது. இதில் மோதுமணி, அவரது 3 மாத ஆண் குழந்தை ஆகியோா் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த மணிகண்டன், மகள் ருத்ரா ஆகியோரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மணிகண்டன் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பாக மூலனூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.