காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகரில் பதுமன் குளத்தை தூா்வாரும் பணிகள், வாரச் சந்தை வளாகத்தில் கடைகள் கட்டும் பணி, நமக்கு நாமே திட்டத்தில் அய்யாசாமி நகரில் மழைநீா் வடிகால் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டாா்.
நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கி.ராஜன், நகராட்சி நிா்வாக மண்டல பொறியாளா் பாலச்சந்திரன், காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.